ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் - தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!
ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இதன் எதிரொலியாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நுழைவாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், நீதிமன்ற வளாகங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபர் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
தேனியிலும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தங்களுக்கு உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஓசூர் வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை ஓஎம்ஆர் சாலையில் வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஓஎம்ஆர் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.