கடல் நீர் மட்டம் உயர்வு - தண்ணீரில் மூழ்கிய தேவிபட்டினம் நவகிரக சிலைகள்!
கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக, தேவிபட்டினத்தில் உள்ள நவகிரக சிலைகள் கடலுக்குள் மூழ்கியது.
Advertisement
ராமநாதபுரத்தை அடுத்த தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவபாஷாண நவகிரக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடலின் நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால், நவக்கிரக கோயிலின் சிலைகள் கடல் நீரில் மூழ்கின. இதனால், பக்தர்கள் அங்குள்ள நடைபாதையில் நின்றபடியே சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
அதன்பேரில் நாகை மாவட்ட மீனவர்கள் 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அக்கரைபேட்டை, கள்ளாறு, சாமந்தாபேட்டை, நாகூர், கீச்சாங்குப்பம் ஆகிய இடங்களில் மீனவர்களின் படகுகள் கரைகளிலும், துறைமுகங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலைச் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.