கடும் பணிச்சுமையில் ஊழியர்கள், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை - சிறப்பு கட்டுரை!
மிகப் பெரிய பிரஷர் குக்கரில் ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்றும், பணிஇடங்களில், மனித உணர்வை மதிக்கும் வகையிலான சிறந்த மாற்றத்துக்கு zoho நிறுவனர்ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
பணியிட அழுத்தம் மற்றும் மனநலம் பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மிக அதிகமான பணிச் சுமைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, சில பெரிய நிறுவனங்களின் ஊழியர்கள் மிக சிறிய வயதிலேயே உயிரிழக்கின்றனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றன. இதனால், அலுவலகப் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் இடையே, உரிய சமநிலை மற்றும் பணியிடத்தில் மனநலம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்
இந்நிலையில், Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதில் ஒரு அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகளாக தாம் வேலை செய்வதாகவும்,இன்னும் 28 ஆண்டுகள் வேலை செய்ய முடியும் என்று கூறிய ஸ்ரீதர் வேம்பு, தன்னால் முடியும் என்பதால், தனது ஊழியர்களை அப்படி வேலை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
பெரிய நகரங்களில், ஊழியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, சிறிய நகரங்களிலிருந்து பெரிய நகரங்களுக்கு வரும் ஊழியர்களுக்கு முதல் சவாலாக தனிமை இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பெரும் நகரங்களில் இரண்டு மணிநேரம் வரை நீடிக்கக்கூடிய பயணங்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருப்பது தான் ஆச்சரியம் என்றும் கூறியுள்ளார்.
சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், அந்தந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மன அழுத்தங்களில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு, இதனால் ஊழியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை சுட்டிக் காட்டிய ஸ்ரீதர் வேம்பு, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கடுமையான போட்டியில் கட்டுப்பாடு தேவை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில், ஏகபோகங்களைத் தடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் ஒளிவிடும் வெற்றிக் கதை என்றும், மற்ற நாடுகளுக்கு டிஜிட்டல் இந்தியா ஒரு முன்மாதிரி என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோஹோவை இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகக் கட்டியெழுப்பிய ஸ்ரீதர் வேம்புவின் வாதங்கள், ஆரோக்கியமான வேலை கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது .