கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரை விவகாரம் - மாநகராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!
கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரையில் ஒரு பகுதியை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், வெள்ளிவிழா கொண்டாடும் முனைப்பில் கன்னியாகுமரியில் பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரையில் ஒரு பகுதியை பேரூராட்சிக்கு ஒப்படைக்கும் அலுவல் ரீதியான பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திரிவேணி சங்கம கடலில் புனித நீராட செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி வந்த முக்கோண பூங்கா அருகில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமும் பூங்காவாக மாற்ற மாவட்ட நிர்வாகம் பணிகளை செய்து வருகிறது.
இவற்றைக் கண்டித்து இன்று கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட நூற்றுக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.