கயானாவின் மிக உயரிய தேசிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் முகமது இர்பான் அலி!
கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான "ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்" விருதை வழங்கினார்.
பிரதமரின் தொலைநோக்கு ராஜதந்திரம், உலக அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளை வென்றெடுத்தல், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை, இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தக் கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியா-கயானா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு தமது அரசுமுறைப் பயணம் ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதைப் பெறும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு அதிபர் சில்வானி பர்ட்டனா கவுரவித்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கயானாவில் நடந்த உச்சிமாநாட்டின் போது, டொமினிகாவின் அதிபர் சில்வானி பர்ட்டனா, பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதை வழங்கினார்.