கருத்து சுதந்திரம் வேண்டும், ஆனால் ஒழுங்குமுறை அவசியம் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே
கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள காவ் கிராமம் பார்காமில், ஆர்எஸ்எஸ்-இன் அகில இந்திய நிர்வாகக் குழுவின் 2 நாள் கூட்டம் நடைபெற்று முடிந்தது.
இதனைதொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, ஒவ்வொரு பிரிவின் பொறுப்பாளர்களுக்கும், கிளைக்கு வருபவர்களுக்கும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆர்எஸ்எஸ் 99 ஆண்டுகளை நிறைவு செய்து நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது சங்கப் பணிகள் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 105 அலகுகளாக விரிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் மீது ஈர்ப்பு இருக்கக்கூடாது என்றும், சங்கத்தின் முக்கியத்துவம், நல்லிணக்கம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளதாகவும் தெரிவித்தார். கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அதற்கான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறினார்.
இதில் அரசு கவனம் செலுத்துவது மட்டுமின்றி, சமுதாயமும் தன் மதிப்பை அதிகரித்துக் கொண்டு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது ஆர்எஸ்எஸ் அகில இந்திய விளம்பர தலைவர் சுனில் அம்பேகர், இணை விளம்பர தலைவர் நரேந்திர தாக்கூர் மற்றும் பிரதீப் ஜோஷி ஆகியோர் உடனிருந்தனர்.