கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல கடந்த 2023-24ஆம் ஆண்டில் கரும்பு விநியோகித்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு செய்திக்குறிப்பும் வெளியிட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால் திமுக ஆட்சியை பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில் , இன்று வரை இந்த தொகையானது விவசாயிகளுக்கு வழங்க எந்த விதமான நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி உள்ளார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை இன்றி விவசாயிகள் பண்டிகையை கொண்டாட முடியாமல் வேதனையில் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
எனவே கரும்பு விவசாயிகளுக்கான ஆதார விலையையும், சிறப்பு ஊக்கத்தொகையையும் உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.