கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்காக வழங்க வேண்டிய ரூ.1000 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய, ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
திருச்சியில் மாநில தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 6-வது மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிரந்தர அங்கீகாரம் வழங்க கோருதல், தனியார் பள்ளிகளுக்கான பாதுகாப்புச் சட்டம், ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்காக, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என கூட்டமைப்பு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் நிலவுவதாகவும், பள்ளிகளுக்கான அத்தியாவசிய செலவினங்களைக் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் 4.5 லட்சம் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.