கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் - 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 6 மாதங்களாக குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது? என அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ? என்றும், மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பெரும்பாலும் ஜோடிக்கப்பட்ட வழக்குகளாக உள்ளதே? எனவும் நீதிபதிகள் வினவினர்.
அத்துடன், இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லையே? என அரசு தரப்பிடம் அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, 70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்தனர்.