கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரிகிறது - வானதி சீனிவாசன்
தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக தெரிவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Advertisement
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. உயர்மட்ட குழு கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கனகசபாபதி நாராயணன் திருப்பதி, வி பி துரைசாமி, கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாராய உயிரிழப்பு குறித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது.
உயர்நீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்கள்.
ஆளும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பிரச்சனையை எடுத்துச் சென்றார்கள்.
அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடி இன்று தீர்ப்பை பெற்றுள்ளார்கள்.
மாநிலத்தின் சட்ட ஒழுங்கு, கள்ள சாராய உயிரிழப்புகள் எல்லாவற்றிலும் தமிழக அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக தெரிகிறது.*உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
சிபிசிஐடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசின் மிகப்பெரிய தோல்வி.மாநில அரசு ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கிறது .இன்னொரு பக்கம் ஆளும் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை.
ஆளுங்கட்சியின் ஆதரவின் காரணமாக பதுங்கியுள்ள காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கும் நபர்கள் சிபிஐ விசாரணையின் மூலம் வெளி வருவார்கள். சிபிஐ விசாரணையில் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.