காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் - விசாரணைக்கு உத்தரவு!
மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனுவின் இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
மாநிலங்களவை கூடியதும் தலைவர் ஜகதீப் தன்கர் பேச தொடங்கினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனு அமரும் 222-ஆவது இருக்கையிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவை பாதுகாவலர்கள் கண்டெடுத்ததாகவும், இது மிகவும் தீவிர பிரச்னை என்றும் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். அத்துடன் மாநிலங்களவையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விசாரணை நிறைவடைந்து இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ரூபாய் நோட்டு கண்டெடுக்கப்பட்ட உறுப்பினரின் பெயரையும், இருக்கை எண்ணையும் அவைத் தலைவர் தெளிவாக உச்சரித்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒட்டுமொத்த தேசமும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும்போது, நாடாளுமன்றத்துக்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருவது ஏற்புடையதுதானா என்றும் கிரண் ரிஜிஜு வினவினார்.
இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்த காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி, அந்தப் பணம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும், 500 ரூபாய் நோட்டை மட்டுமே கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அத்துடன், அவையில் வெறும் மூன்று நிமிடம் மட்டுமே தாம் இருந்ததாக கூறிய அவர், எஞ்சிய முப்பது நிமிடங்களை கேன்டீனில் செலவிட்டதாக குறிப்பிட்டார்.