காங்கேயம் காளை சிலை! : திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!
காங்கேயம் காளை சிலையை, காங்கேயத்திலேயே வைக்க அனுமதி இல்லை என்றால், வேறு எங்கு வைப்பது? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரத்தில் அமைந்துள்ள, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக முன்பகுதியில், காங்கேயம் பகுதியின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், காங்கயம் பகுதியின் அடையாளச் சின்னமான "காங்கேயம் காளை சிலை” அமைக்க, அப்பகுதி பொது மக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், அனுமதி கொடுக்காமல் இருக்கிறது திமுக அரசு.
காங்கேயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திரு.மகேஷ்குமார் அவர்கள் முயற்சியால், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில், கடந்த 28.02.2022 அன்று, தீர்மான எண்.350-ன் படி காங்கயம் காளை சிலை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 02.03.2022 அன்று, காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காளை சிலை அமைக்க அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஆனால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், சிலை வைக்க அனுமதி மறுத்திருக்கிறார். இதன் பின்னணியில், திமுகவினர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.மகேஷ்குமார் அவர்களின் தொடர் முயற்சியால், காங்கயம் காளையின் பாரம்பரியத்தை விளக்கி, அரசின் இதர துறைகளிடம் உரிய அனுமதி பெற்று, மீண்டும் கடந்த 19.09.2022 அன்று, காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில், நமக்கு நாமே திட்டம் மூலம் நிதி திரட்டி சிலை அமைத்துக்கொள்ள அனுமதி கேட்டு, தமிழக அரசின் செயலாளர் அவர்களுக்குத் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 21.01.2023 அன்று, பொருந்தாத காரணங்களைக் கூறி, மாவட்ட ஆட்சித்தலைவர் இந்தக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்திருக்கிறார். காங்கயத்தின் பாரம்பரிய அடையாளமாகிய காங்கயம் காளை சிலையை, காங்கயத்திலேயே வைக்க அனுமதி இல்லை என்றால், வேறு எங்கு வைப்பது? காணும் இடங்களிலெல்லாம், தன் தந்தை கருணாநிதி சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ₹1,000 கொடுப்போம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்து, ஆண்டு நான்காகிறது. அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில், காங்கயம் பகுதி மக்கள் காளை சிலை வைப்பதில், திமுகவுக்கு என்ன வெறுப்பு? தமிழகத்தின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்க எண்ணமா?
உடனடியாக, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக முன்பகுதியில், காங்கயம் பகுதியின் அடையாளச் சின்னமான "காங்கேயம் காளை சிலை” அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று, திமுக அரசையும், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரையும் வலியுறுத்துகிறேன். மறுத்தால், தமிழக பாஜக சார்பில், மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.