சத்தியமங்கலம் அருகே காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்து விவசாயி பலியான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே முள்ளிக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயி, உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது காரை இயக்கியுள்ளார். காரை பின்னோக்கி இயக்கியபோது, எதிர்பாராத விதமாக சிறிய தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் கிணற்றுக்கு விழுந்துள்ளது.
80 அடி ஆழமுள்ள கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்ததால் , காருடன் சிவகுமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது காரில் இருந்த பெட்ரோல் மற்றும் ஆயில் தண்ணீரில் கலந்ததால் சிவக்குமாரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
கிணற்றில் இருந்து தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், சிவகுமாரை மீட்கும் பணியில் 4 மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, கிணற்றில் இருந்த தண்ணீர் நச்சுத்தன்மையாக மாறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூர்த்தி என்ற மீனவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு இருவரின் சடலங்களையும் தீயணைப்புத்துறை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.