கார்த்திகை மகா தீப உற்சவம் : திருவண்ணாமலைக்கு 4000 சிறப்பு பேருந்துகள்!
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப உற்சவத்தை முன்னிட்டு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருநாள் வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டும் 14.12.2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் வரும் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10110 நடைகள் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.