கார் பந்தயத்தில் 3-ம் இடம் பிடித்த நடிகர் அஜித் குமார் அணி!
துபாயில் நடைபெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்தின் அணி, 992-வது பிரிவில் 3-ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள அஜித் குமார் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தையத்தில் தனது அணியுடன் பங்கேற்றார். 4 பேர் கொண்ட இந்த அணியில் நடிகர் அஜித்துடன் சேர்த்து ஃபேபியன், டெட்ரி மற்றும் கேமி ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் கார் பந்தையம் தொடங்கிய நிலையில், அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு ஆதரவு தெரிவித்ததால் அரங்கம் களைகட்டியது. இந்நிலையில், 24 மணி நேர கார் பந்தயம் முடிவடைந்த நிலையில், 992-வது பிரிவில் நடிகர் அஜித்தின் அணி 3-ம் இடம் பிடித்தது. அத்துடன் GT4 பிரிவில் அஜித்தின் அணிக்கு 'SPIRIT OF THE RACE' என்ற விருதும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு மேடையில் வெற்றி மகிழ்ச்சியை தேசியக்கொடியை ஏந்தி வந்து வெளிப்படுத்திய நடிகர் அஜித் குமார், அதனை அவரது குடும்பத்தாருடனும் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து தேசியக்கொடியை ஏந்தியவாறு ரசிகர்களை நடிகர் அஜித் சந்தித்த நிலையில், போட்டியை காண துபாய் சென்றிருந்த நடிகர் மாதவன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.