காலத்தால் அழியாத கவிதைகள் தந்த மகா கவிஞர் கண்ணதாசன் - சிறப்பு கட்டுரை!
திரைப்பட பாடல்கள் மூலம் கோடானு கோடி இதயத்தைக் கவர்ந்த மகா கவிஞர் கண்ணதாசனின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப் படுகிறது. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ,எந்த நிலையிலும் தமக்க மரணமில்லை என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு கூடல்பட்டி என்னும் சிற்றூரில், சாத்தப்பன் விசாலாட்சி தம்பதியருக்கு 1927ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, எட்டாவது மகனாக பிறந்தார் கண்ணதாசன். சிறுவயதிலேயே கலையார்வம் இருந்த காரணத்தால், எட்டாம் வகுப்போடு, படிப்பை விட்டு விட்டு 1943ம் ஆண்டு சென்னை வந்தார்.
கண்ணன் மீதான தீவிர பக்தியால், முத்தையா என்ற தனது இயற்பெயரை
கண்ணதாசன் என்று வைத்துக்கொண்டவர், ஆரம்ப காலங்களில், திருமகள்,சண்டமாருதம் ,திரை ஒளி,தென்றல்,முல்லை,கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக செம்மையாக பணியாற்றி இருக்கிறார்.
சண்டமாருதம் இதழ் நிறுத்தப்பட்டதால் ,சேலம் மாடர்ன் தியேட்டரில் கதை இலாகாவில் பணியில் சேர்ந்தார் கண்ணதாசன்.
பிறகு, ஜூபிடர் நிறுவன தயாரிப்பில் வெளியான கள்வனின் காதலி திரைப்படத்தில், கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என, முதல் திரைப்படப் பாடலிலேயே தன்னம்பிக்கை தந்திருந்தார்.
அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகள் , தமிழ் திரைத் துறையை முழுமையாக தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தார். மேலும் தமிழ் உள்ளங்களை தன் திரைத் தமிழால் கட்டி வைத்திருந்தார்.
இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள்,இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட எல்லோரும் கண்ணதாசனின் பாடல்கள் தங்கள் படங்களில் இடம் பெறுவதைப் பெருமையாக கருதினார்கள்.
தொடக்கத்தில், திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த கண்ணதாசன், பிறகு இந்து மதத்தில் பற்றுடையவரானார். 10 தொகுதிகளாக அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் நூல், இன்றும் உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
எல்லா மதத்தையும் மதிக்கும் இந்துமதம் போலவே, கவிஞர் கண்ணதாசனும் , இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை மகா காவியமாக படைத்து தந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
சேரமான் காதலி என்னும் புதினத்துக்காக இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசன், தலைசிறந்த பாடலாசிரியர் ஆவார்.
கிட்டத்தட்ட7500க்கும் மேற்பட்ட தனிக்கவிதைகள், 5000க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள், நாவல்கள்,சிறுகதைகள்,சிற்றிலக்கியங்கள், நாடகங்கள்,மொழிபெயர்ப்பு,காவியங்கள்,உரைநூல்கள் என ஊற்றுப் பெருக்காக இலக்கியங்களின் அனைத்து வடிவங்களிலும் தன் ஆளுமையை செலுத்தியவர் கண்ணதாசன்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக 1981ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணதாசன், அதே ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி காலமானார்.
ஆறுதலாக, தாலாட்டாக, உத்வேகமாக, தன்னம்பிக்கையாக,காதலாக, கண்ணீராக, சோகமாக , சந்தோஷமாக என எல்லா உணர்வுகளுக்கும் கண்ணதாசனின் பாடல்களே துணையாக இன்றும் இருக்கின்றன.
காட்டுக்கு ராஜா சிங்கம், கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என்று போற்றப்படும் கண்ணதாசனின் நினைவு நாளில், மகா கவிஞனின் தமிழைப் போற்றுவோம்.