காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க கோரிய கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேவேளையில், நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என கர்நாடக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நதிநீர் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியே இதுவரை வழங்கப்படாத நிலையில், எப்படி தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
மேலும், கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.