செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா துடிப்பது ஏன்? - சிறப்பு தொகுப்பு!

09:02 AM Apr 05, 2025 IST | Ramamoorthy S

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் க்ரீன்லாந்து பயணம், அந்நாட்டை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்பின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் குறிவைப்பது ஏன் ? ட்ரம்பின் நோக்ககங்கள் என்ன ? அந்நாட்டில், அப்படி என்ன தான் இருக்கிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

ஆர்டிக் ஆதிக்கத்துக்கு நுழைவாயிலாக இருக்கும் கிரீன்லாந்து, புவிசார் அரசியலில் ஒரு முக்கிய சதுரங்க காயாகும்.

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார். 2019 ஆம் ஆண்டு கிரீன்லாந்தை வாங்கும் யோசனையை, ட்ரம்ப் முதன்முதலில் முன்வைத்தார். டென்மார்க் அரசு இந்த யோசனையை நிராகரித்தது.

Advertisement

இரண்டாவது முறையாக அதிபரான ட்ரம்ப், க்ரீன்லாந்தைக் கையகப் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஜனவரியில், ட்ரம்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜூனியர், க்ரீன்லாந்துக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது மனைவி உஷா வான்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோருடன் கிரீன்லாந்துக்குச் சென்றார்.

வான்ஸின் வருகையை கிரீன்லாந்து மக்கள் நிராகரித்தனர். இது, ராஜ தந்திர ரீதியாக இருநாடுகளுக்கும் இடையே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் எந்த எல்லைப் பகுதிகளையும் பகிர்ந்து கொள்ளாத கிரீன்லாந்து, வட அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ளது.

சுமார் 60,000 மக்கள் தொகை கொண்ட கிரீன்லாந்து தன்னாட்சி பெற்ற நாடாகும். டென்மார்க் அரசு ஒவ்வொரு ஆண்டும், கிரீன்லாந்துக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை மானிய நிதியாக வழங்கி வருகிறது. அதுமட்டும் இல்லாமல், கிரீன்லாந்தின் வெளியுறவு விவகாரங்களை டென்மார்க் தான் கட்டுப்படுத்துகிறது.

கிரீன்லாந்து சுமார் 8,40,000 சதுர மைல் பரப்பளவு கொண்டதாகும். இது டென்மார்க்கை விட 3 மடங்கு பெரியதாகும். கிரீன்லாந்தின் சுமார் 80 சதவீத பகுதிகள் 2 மைல்கள் வரை தடிமன் கொண்ட பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. புவி வெப்பமடைவதன் காரணமாக பனிப் பாறைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன.

பனிக்கட்டிகள் உருகும் போது, புதிய கப்பல் பாதைகள் உருவாகின்றன. இதனால், பயண நேரமும்,செயல்பாட்டு செலவுகளும் வெகுவாக குறைகிறது. பல அரிய வகை கனிமங்களின் இருப்பிடமாக கிரீன்லாந்து உள்ளது. முக்கியமான மூலப்பொருட்கள் என்று கருதப்படும் 34 அரியவகை கனிமங்களில், 25 கிரீன்லாந்தில் உள்ளன.

கிரீன்லாந்தின் நர்சாக்கில் 12 மில்லியன் டன் கனிமங்கள் உள்ளன. இது, சீனாவுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய அரிய-கனிமங்கள் உள்ள பகுதியாகும். கிராஃபைட் , டான்டிலைட் , யுரேனியம் உள்ளிட்ட கனிம வளங்கள் கிரீன்லாந்தில் உள்ளன. மேலும், தங்கம் போன்ற விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் மற்றும் ஹைட்ரோகார்பன்களும் உள்ளன.

சுமார் 31 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் உள்ளன. கிரீன்லாந்தில் யுரேனியம் சுரங்கங்கள் உள்ளன. என்றாலும், யுரேனியம் சுரங்கத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே, கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்காவின் பிட்டுஃபிக் விண்வெளித் தளம், ஆரம்ப எச்சரிக்கைகள் முதல் ஆர்க்டிக் ஆய்வுகள் வரை பல்வேறு செய்லபாடுகளில் ஈடுபட்டு வருகிறது. கிரீன்லாந்து தொலைநோக்கி திட்டத்தின் மூலம் வானியல் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

ஆர்டிக் பிராந்தியத்தில், ரஷ்யா ஏற்கெனவே அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. சீனாவும் தன இருப்பை அதிகரித்து வருகிறது. அதனால், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்கவுக்கு கிரீன்லாந்து தேவைப்படுகிறது. க்ரீன்லாந்தை வாங்கி விட்டால், நிலப் பரப்பில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக அமெரிக்கா மாறும். ஆர்டிக் பிராந்தியத்தில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த முடியும்.

இந்த காரணங்களால் தான் ட்ரம்ப் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளார். அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிராக, கடுமையான எச்சரிக்கையை டென்மார்க் கொடுத்துள்ளது.

இதற்கிடையே, கிரீன்லாந்து விவகாரத்தில் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், கிரீன்லாந்தை கைப்பற்றும் முடிவில் ட்ரம்ப் தீவிரமாக இருந்தால், ஆர்க்டிக் பகுதியில் போர் ஏற்படுவது உறுதி என்று எச்சரித்துள்ளார். முன்னதாக, ஆர்டிக்கில் ரஷ்யாவின் ராணுவப் பயிற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

இது நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று கூறப் படுகிறது. கிரீன்லாந்தில் அமெரிக்காவின் தலையீட்டால், உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சறுத்தல் வந்துள்ளது.

இதுவரை கேள்வி கேட்கப்படாத அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தின் நாட்கள் முடிந்துவிட்டன. அமெரிக்க துணை அதிபரின் கிரீன்லாந்து பயணம் இதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. வான்ஸின் தோல்வியுற்ற கிரீன்லாந்து பயணத்தால் ஆர்டிக் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்கா பின்தங்கி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
Tags :
nergy Secretary Chris WrightFEATUREDMAINUS President TrumpUS Vice President JD Vance'Trump targetingJD Vance's Greenland tripUS National Security Advisor Michael Waltz
Advertisement
Next Article