கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!
கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது, இருதரப்புக்கும் நல்லது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
Advertisement
மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலின் ஒருசில பகுதிகளை இடித்துவிட்டு, ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன.
மேலும், ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ள இடம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி நிலம் என்பதால் மசூதியை அகற்ற வேண்டும் என்று மதுரா சிவில் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வலியுறுத்தி, இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன.
இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரிப்பது இரு தரப்புக்கும் நல்லது எனக்கூறி, வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.