கிறிஸ்துமஸ் பண்டிகை - நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாட்டின் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்துரைக்கும் விதமாக கண்கவர் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவா, டெல்லி, ராஜஸ்தான், மும்பை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனைகள் நடத்தினர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு இயேசு கிறித்து பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிறிஸ்மஸ் பண்டியையையொட்டி தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில், சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமானோர் புத்தாடைகள் அணிந்து கொண்டு குடும்பத்துடன் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள தூய பவுல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புனித சகாய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், வழிபாட்டு பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி முழுவதுமுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், வெளிநாட்டினர், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.