கிழக்கு கடற்கரைச் சாலை, ஓஎம்ஆர் சாலையில் பரவலாக மழை!
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரைச் சாலை, ஓஎம்ஆர் சாலை, வேளச்சேரி, தரமணி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பரவலாக பெய்து வருகிறது. மேலும், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், ஊரப்பாக்கத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்புவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருமயம், அன்னவாசல், கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.