குடியரசு தலைவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆளுநர்!
உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கடன் இராணுவ கல்லூரியில் பழங்குடியினர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி, டெல்லியில் இருந்து உதகைக்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ரவி மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
குடியரசு தலைவர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமிரா கண்காணிப்பு உதவியோடு தீவிர சோதனை நடைபெற்றது.
மேலும், 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அரசு தாவரவியல் பூங்காவில் குடியரசு தலைவர் தங்கும் ஆளுநர் மாளிகை உள்ள நிலையில், அரசு பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.