குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது!
சேலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவரான விக்னேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய அவர்கள், தினேஷ் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியையும் உடைத்து சேதப்படுத்தினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், தினேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பரத் என்ற சட்டக்கல்லூரி மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 சட்டக் கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.