குட்டியை காக்க துடித்த பெண் நாய்!
உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது குட்டிக்கு உதவிகோரி, பெண் நாய் கால்நடை மருத்துவரை தேடி வந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!
கடுங்குளிரால் உறைந்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனது குட்டியை வாயில் கவ்வி எடுத்து வந்த பெண் நாய், நேராக கால்நடை மருத்துவரின் கிளிக்கிற்கு சென்று உதவி கேட்ட நெகிழ்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்தான் இவை.
கிளினிக் வாயில் முன்பு பெண் நாய் நிற்பதை கண்ட மருத்துவ உதவியாளர் எமிர், கதவை திறந்து வெளியே சென்று பார்த்தபோது, அசைவற்ற நிலையில் நாய்க்குட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அதனை உள்ளே எடுத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்த அவர், நாய்க்குட்டியின் இதயத்துடிப்பு மிக குறைவாக இருந்தது பற்றி கால்நடை மருத்துவர் பாடுரால்ப் டோல்கனுக்கு (Baturalp Dolgan) தகவல் தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவர் டோல்கன், தேவையான ஊசி, மருந்து உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கி நாய்க்குட்டியின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதுபற்றி அந்நாட்டு செய்தி நிறுவனங்களிடம் மனம் திறந்த மருத்துவர் பாடுரால்ப் டோல்கன் (Baturalp Dolgan), பெண் நாயின் தவிப்பை உணர தனது உதவியாளர் எமிருக்கு சற்று நேரம் பிடித்தாலும், உரிய நேரத்தில் நாய்க்குட்டிக்கு முதலுதவி அளித்து தனக்கும் தகவல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நாய்க்குட்டி இறக்க அதிக வாய்ப்பிருந்தபோதிலும் முயற்சியை கைவிடாமல், தொடர் சிகிச்சை அளித்ததன் காரணமாக அதன் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்பையும், அரவணைப்பையும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல், தன்னலமின்றி அளிக்கும் தியாக உருவின் பிறப்பிடம் தாய்மை.
இந்த தாய்மை உணர்வு மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் வேறுபடாது என்பதையே இந்த சிசிடிவி காட்சி உணர்த்தியிருக்கிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சிசிடிவி காட்சி, அதை காணும் பலருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.