குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்!
நடப்பாண்டின் தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. இதில் பங்கேற்க வந்த அதிமுக எம்எல்ஏக்கள், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எழுப்பும் வகையில், யார் அந்த சார்? என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து, அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதியை கொடு... நீதியை கொடு... என முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
அவையில் அமளியில் ஈடுபட்டதையடுத்து, சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி அவர்கள் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.