குமரியில் தொடர் மழை: அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக திற்பரப்பு, குற்றியாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இடையிடையே, பெய்து வரும் கனமழையால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. இதேபோல், 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும், குற்றியாறு இரட்டை அருவி, கோதையார் அருவி போன்றவற்றில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த இரு அருவிகளும் காட்டுக்குள் அமைந்துள்ளதால், வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், அருவிகளில் ஆர்ப்பரித்துத் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது