குமரி அனந்தன் கடந்து வந்த பாதை!
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் வாழ்க்கை வரலாறு மற்றும் கடந்து வந்த அரசியல் பாதை குறித்து தற்போது காணலாம்.
Advertisement
குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரத்தில் கடந்த 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி, சுதந்திர போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட குமரி அனந்தன் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்.
கிருஷ்ணகுமாரி என்பவரை வாழ்க்கை துணைவியாக கரம் பிடித்த குமரி அனந்தனுக்கு ஒரு மகனும், தமிழிசை சௌந்தரராஜன் உட்பட 4 மகள்களும் உள்ளனர்.
பின் நாட்களில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட குமரி அனந்தன், கடந்த 1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை எழுப்பிய குமரி அனந்தன், இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என உரக்க குரல் எழுப்பினார்.
காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய குமரி அனந்தன், கடந்த 1980-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியிலும், 1984-ம் ஆண்டு ராதாபுரம் தொகுதியிலும் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னாட்களின் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக்கொண்ட குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார்.
கடந்த 1996-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தன், அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டார்.
இலக்கிய செல்வர் என அனைவராலும் போற்றப்பட்ட குமரி அனந்தன், கலித்தொகை இன்பம், படித்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
தருமபுரியில் பாரத மாதாவிற்கு கோயில் கட்ட வேண்டும், நதிகள் இணைப்பு, பனை மரத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட பல மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளையும் இவர் மேற்கொண்டுள்ளார்.
இவரது அரசியல் மற்றும் மக்கள் சேவையை பாராட்டி கடந்த 2024-ம் ஆண்டு, தமிழக அரசு குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' என்ற விருது வழங்கி கௌரவித்தது.
அரசியலில் தான் எதிர்கொண்ட பின்னடைவுகளை பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வந்த குமரி அனந்தன், தனது 93-வது வயதில் இயற்கை எய்தினார்.