கும்ப மேளா கூட்ட நெரிசல் - உ.பி. முதல்வரிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தனர்.
Advertisement
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 14ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு இன்று பக்தர்களின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தடுப்புகளை அகற்றி பக்தர்கள் வெளியேற முயன்றனர். அப்போது சுமார் 50 பக்தர்கள் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதேபோல் கூட்ட நெரிசல் விவரங்களை கேட்டறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.