கும்ப மேளா விழாவில் பங்கேற்க சென்றவர்களை வழி அனுப்பி வைத்த ஏபிஜிபி அமைப்பினர்!
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை ஏபிஜிபி அமைப்பினர் வழியனுப்பி வைத்தனர்.
பிரயாக்ராஜில் வரும் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை மகா கும்பமேளா விழா நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பிரயாக்ராஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அயோத்தி வழியாக பிரயாக்ராஜ் புறப்பட்டு சென்றவர்களை ஏபிஜிபி அமைப்பினர் வழியனுப்பி வைத்தனர்.முன்னதாக சிறப்பு ரயிலுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர் பேசிய ஏபிஜிபி அமைப்பின் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களின் அமைப்புச் செயலாளர் சுந்தர், மகாகும்ப மேளா விழாவிற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது ஏபிஜிபி அமைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து நாள்தோறும் பிரயாக்ராஜிற்கு ரயில்கள் இயக்க ஏபிஜிபி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் ஆதரவை பொறுத்து முடிவெடுக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் உறுதியளித்துள்ளதாகவும் சுந்தர் தெரிவித்தார்.