குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை என்ஐஏ நீதிமன்றம் நடத்தலாம் - உயர் நீதிமன்றம்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் என பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கை பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது பரூக் என்பவர் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதற்கு எதிராக முகமது பரூக் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை சிறப்பு நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
மேலும், அந்த மனுக்களை பெருந்தன்மையுடன் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் ஆஜராகாமல் இருப்பதால் விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக கூறுவதை ஏற்க முடியாது எனக்கூறி பிடிவாரண்ட் உத்தரவையும் ரத்து செய்தனர்.
NIA மற்றும் பொடா சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமல் வழக்கு விசாரணையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.