குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - மணிமுத்தாறில் தடை!
குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீரான நீர்வரத்து காணப்படுவதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்கின்றனர்.
புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குவிந்துள்ளனர்.
இதனிடையே, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் 2வது நாளாக தடை விதித்துள்ளனர்.