For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!

06:35 AM Jan 07, 2025 IST | Murugesan M
குழந்தை வேலப்பர் திருக்கோயில்    முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்

இரசவாதி என்றழைக்கப்படும் போகர் சித்தர் வடித்த நவபாஷான சிலைகள் அமைந்துள்ள இரு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலின் தனிச்சிறப்புகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

பொதுவாக கோயில்களில் உள்ள மூலஸ்தானத்தில் மரத்தாலான சிலை, கற்களால் செய்யப்பட்ட சிலை, ஐம்பொன், வெண்கலம் இத்தனை ஏன் தங்கத்தாலான சிலை இருப்பதைக் கூட நாம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள இரு முருகன் கோயில்களில் மட்டுமே நவபாஷானத்தால் ஆன அபூர்வ சிலைகள் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அதில் ஒன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மற்றொன்று கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் திருக்கோயில். இந்த இரு சிலைகளுமே 18 சித்தர்களுள் தனிச்சிறப்பு பெற்றவராக கருதப்படும் போகரால் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

நாம் வழிபட நினைக்கும் எந்த கோயிலுக்கு வேண்டுமானாலும் உடனே புறப்பட்டு சென்று மூலவரை தரிசித்துவிட முடியும். ஆனால், அந்த முருகனே நினைத்தால் மட்டும்தான், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்குச் சென்று மூலவரை தரிசிக்க முடியுமாம்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூம்பாறை கிராமத்தில்தான் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குழந்தை வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 12-ம் நூற்றாண்டில் சேரர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

நவ என்றால் ஒன்பது, பாஷானம் என்றால் விஷம்... ஆம் ஒன்பது விஷங்களை சரியான விகிதத்தில் கலந்து பல்வேறு மூலிகைகளை அதனுடன் சேர்த்தே, இந்த நவபாஷான சிலைகளை உருவாக்கியிருக்கிறார் இரசவாதத்தில் கைதேர்ந்த போகமாமுனிவர். அதனால்தான் இந்த கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அனைத்து தீர்த்தங்களும், பிணி தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒருமுறை அருணகிரிநாதர் இந்த கோயிலுக்கு முருகனை தரிசிக்க வந்தபோது, இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவரை கொல்ல முயன்ற ஒரு அரக்கியை, குழந்தை உருவெடுத்து ஏமாற்றி அருணகிரிநாதரின் உயிரை முருகனே காப்பாற்றியதாகவும், ஞான திருஷ்டியில் இதை கண்ட அருணகிரிநாதர் அவரை குழந்தை வேலப்பராக போற்றியதாகவும் இக்கோயிலின் வரலாற்று சான்றுகளில் சொல்லப்பட்டுள்ளன.

அன்று முதல் தன்னிடம் வேண்டும் பக்தர்களின் பாவ வினைகளை போக்கி, குழந்தை வேலப்பராக அவர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் முருக பெருமான்.

Advertisement
Tags :
Advertisement