கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! - மாணவி தற்கொலை முயற்சி!
சென்னையில் கல்லூரி நிர்வாகம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகக் கூறி, மன உளைச்சலில் தனியார் கல்லூரி மாணவி எலி மருந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி, அதே பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிஏ எகனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை அவர் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.
இருந்தபோதிலும் அவருக்கு ஹால் டிக்கெட் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்ததால், இன்று கல்லூரிக்குச் சென்ற லோகேஸ்வரி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அப்போது, அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி லோகேஸ்வரி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், எலி மருந்து குடித்து மயக்கமடைந்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்லூரி மீது உயர்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பயிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.