கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் 2-வது நாளாக வடியாத நீர் - குடியிருப்புவாசிகள் அவதி!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் 2-வது நாளாக தண்ணீர் வடியாததால் குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்ததில், இப்பகுதி முழுவதும் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அவதியடைந்த குடியிருப்பு வாசிகள், அப்பகுதியை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
2-வது நாளாக முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் கடும் அவதியடைந்த மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மழை வரும்போதெல்லாம் இப்பகுதிகளை தண்ணீர் சூழ்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் சேதமடைவதாக வேதனை தெரிவித்துள்ள குடியிருப்பு வாசிகள், இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.