கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ - சரவணன்!
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலும், டாக்டர்.சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக செல்லூர் ராஜூ பணியாற்றி வரும் நிலையில், மருத்துவரணியின் இணை செயலாளராக டாக்டர்.சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார். நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர்.சரவணன், 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான அதிமுக தொண்டர்கள், செல்லூர் ராஜூ தான் இதற்கு காரணம் எனவும், சரவணன் தோல்வியடைய வேண்டும் என்றே செல்லூர் ராஜூ உள்ளடி வேலை பார்த்ததாகவும் முணுமுணுத்துக் கொண்டனர். இந்த தோல்வியின் எதிரொலியாக சரவணனுக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதிமுக நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி குறைகளை சுட்டிக்காட்ட முயன்றனர். செல்லூர் ராஜூ மீது அவர்கள் புகார் கூற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள், மேடையில் ஏறிய நிர்வாகியை சரமாரியாக அடித்து கீழே தள்ளினர்.
அமைச்சர் செல்லூர் ராஜூவும் "அவரை அடிங்க" என மைக்கிலேயே பேசினார். மேடையில் அமர்ந்திருந்த செம்மலை, அருகில் அமர்ந்திருந்த மருத்துவர் சரவணனை கைகாட்டி இவர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறினார்.
தொடர்ந்து கள ஆய்வுக்கூட்டம் நிறைவு பெற்றவுடன் வெளியில் வந்த மருத்துவர் சரவணன், "அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம்; இதெல்லாம் சாதாரணம்" எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.
மதுரை அதிமுகவை 4 மாவட்டங்களாக பிரித்து அதில் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை பெற சரவணன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், சரவணன் வளர்ந்தால் அது தனது இடத்தை கேள்விக்குறியாக்கும் என செல்லூர் ராஜூ நினைப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இருவருக்கும் இடையிலான மோதலை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களும், மருத்துவர் சரவணன் ஆதரவாளர்களும் தனித்தனியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செல்லூர் ராஜூ, சரவணனை தவிர்த்து அங்கிருந்த மற்ற அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.
செல்லூர் ராஜூ, சரவணன் இடையிலான மோதல் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என ஆதங்கம் தெரிவிக்கும் அதிமுக தொண்டர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.