For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் : குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள் - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Dec 19, 2024 IST | Murugesan M
கேரளாவில் இருந்து வரும் கழிவுகள்   குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள்   சிறப்பு தொகுப்பு

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால், தமிழக எல்லையோர மாவட்டங்கள் குப்பைக் கிடங்காக மாறி வருகின்றன.
இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குளறுபடி செய்திருப்பது அப்பகுதி மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா, பல தசாப்தங்களாகவே தங்கள் மாநிலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தமிழகத்தை குப்பை கொட்டும் தளமாக பயன்படுத்தி வருகிறது.

Advertisement

அண்மையில் நெல்லை நடுக்கல்லூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டன. இது குறித்து நவம்பர் 11-ம் தேதியே சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், கேரள குப்பை கழிவுகள் விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் போலீசார், அந்த புகாரை வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளாத நிலையில், ஊடகங்களில் இதுகுறித்த செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாவதை உணர்ந்த போலீசார், 37 நாட்களுக்குப் பிறகு அவசர அவசரமாக கடந்த திங்கட்கிழமை புகார் மனுவை பெற்று, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

Advertisement

அதில் புகாரளித்த நபரால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காலதாமதமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எப்.ஐ.ஆரில் எந்த ஒரு இடத்திலும் மருத்துவக் கழிவுகள் எனும் வார்த்தையே இடம் பெறாதது அப்பகுதி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இதனிடையே தமிழகத்தை கேரளா குப்பைக் கிடங்காக பயன்படுத்தி வருவதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், குப்பைகள் கொட்டப்படுவதை திமுக அரசு தடுக்காவிட்டால், அந்த குப்பைகள் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு சென்று
கொட்டப்படும் என எச்சரித்திருந்தார்.

நடுக்கல்லூரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவ இடத்தை, நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பேசிய அவர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கனிமவளங்களை ஏற்றிக் கொண்டு கேரளா செல்லும் லாரிகள், திரும்பும் வழியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக குற்றம்சாட்டினார்.

கேரளாவில் இருந்து தமிழகம் வர இரு வேறு இடங்களில் சோதனை சாவடிகள் உள்ள நிலையிலும், மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழகத்திற்குள் கொட்டப்பட்டு வருவதாகவும் தயாசங்கர் கூறினார்.

மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த உலக அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், சர்வசாதாரணமாக தமிழக எல்லைகளுக்குள் அவை கொட்டப்படுவது மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக வழிவகை செய்துள்ளது.

இதுகுறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கேரளாவுக்குள் சென்று குப்பைகளை கொட்டுவோம் என பாஜகவினர் கூறியுள்ளனர். இதன் மூலம் ஏதேனும் சட்ட - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு திமுக அரசே பொறுப்பு எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலேனும் எல்லையோர மாவட்டங்களில் குப்பைகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்...

Advertisement
Tags :
Advertisement