கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!
கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதனால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்திற்குக் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
Advertisement
சென்னைக்கு அழகு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரை , தலைமை செயலகம், ரிப்பன் கட்டிடம் ,உயர் நீதிமன்றம் ,மெட்ரோ ரயில்கள், அருங்காட்சியகங்கள் எனப் பல இருக்கின்றன. ஆனால் மறுபுறமோ வட சென்னை மக்களின் பெருந்துயராக கொடுங்கையூர் குப்பை கிடங்கு காட்சியளிக்கிறது.
நாள் ஒன்றுக்கு இந்த குப்பை கிடங்கில் சென்னை முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதே நேரத்தில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு உரமாகவும் மாற்றப்படுகின்றன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய எரிவுலை திட்டத்தை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. இந்தத் திட்டத்தால் டன் கணக்கில் குப்பைகள் எரிக்கப்பட்டு அவை மின் ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இதனால் சென்னை மாநகராட்சிக்கு மின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் கொடுங்கையூர் கிடங்கில் உள்ள குப்பையின் அளவும் குறையும் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்தத் திட்டத்தை கொடுங்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏற்க மறுக்கின்றனர். ஏற்கனவே பெருந்துயருக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடசென்னைவாசிகள் எரிவுலை திட்டத்தால் மேலும் உடல் உபாதைகளும் , சுவாச பிரச்சனைகளும் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். பிறக்கும் எங்கள் குழந்தைகள் நோயுடன் பிறக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.
குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தால் கொடுங்கையூர் மக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும் அதனை கைவிடக் கோரியும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கையெழுத்திட்ட கடிதம் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது.
வடசென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையால் சிறுவர்கள் வரை சீரழிவது தொடர்கதையாகி வருகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசுபாடும் ஏற்பட்டு பொதுமக்களின் உடல் நலனுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் வடசென்னை மக்கள் மேலும் ஒரு பேரிடியாய் எரிவுலை திட்டத்தை கருதுகின்றனர்.
சுவாச பிரச்சனைகள், புற்றுநோய் ,மூச்சு திணறல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் தீங்கு விளைவிக்கும் எரிவுலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட்டு விட்டு வடசென்னை சூழலுக்கு ஏற்றார் போல பாதுகாப்பான கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவ ஆராய்ச்சியாளர் விஸ்வஜாவும் வலியுறுத்துகிறார்.