கொடைக்கானல் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு!
கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து இரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும், குளுகுளு காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் ரோஜா தோட்டம், பசுமை பள்ளத்தாக்கு, வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, பைன் மரக் காடுகள், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களைப் பார்த்து இரசிப்பர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகக் கொடைக்கானலில் பெய்து வரும் மழையின் காரணமாக, முக்கிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெள்ளிநீா் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி, தலையாறு அருவி, மூலையாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்போது, மலைப்பகுதிகளில் லேசான சாரல் மழையும், கடும் குளிரும் நிலவுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிருக்குப் பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியும், நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தும் சுற்றுலா இடங்களைக் கண்டு இரசிக்கின்றனர்.