கொட்டும் பண மழை - 4000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் - சிறப்பு கட்டுரை!
பாக்ஸ் ஆபீஸில் ஒரு திரைப்படம் அமோக வெற்றி என்பதன் புதிய அடையாளமாக 1000 கோடி ரூபாய் கிளப் என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய அடையாளத்தைப் பெற்ற இந்திய திரைப்படங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்குத் துறையின் தாயகமாக இந்தியா உள்ளது. குறிப்பாக, விற்கப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் தயாரிக்கப்பட்ட திரைப் படங்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் இந்தியா உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறையைக் கொண்டுள்ளது.
இந்திய திரைப்பட வர்த்தகத்தில், கேளிக்கை வரி போக, 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலாகும் திரைப்படங்களை, இன்றைக்கு100 கோடி கிளப் என்று அழைக்கப் படுகிறது. இந்தியாவில்,100 கோடி ரூபாய் வசூலான முதல் திரைப்படம் இந்தியில் வெளியான டிஸ்கோ டான்சர் திரைப்படமாகும் .
1982 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, மும்பையைச் சேர்ந்த ஒரு சேரி கலைஞனின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அன்றைய சோவியத் யூனியனில் அதிகம் வசூலான படமாகவும் இப்படம் சாதனை படைத்தது.
இன்றைய பணவீக்கத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், டிஸ்கோ டான்சர் படம், கிட்டத்தட்ட 1820 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
சராசரி இந்தியத் திரையரங்குகளில் சராசரியாக ஒரு டிக்கெட்டின் விலை 130 ரூபாய். அதுவும், மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்னும் இருமடங்கு அதிகமான விலைக்கே டிக்கெட் விற்கப் படுகிறது.
முன்பெல்லாம், குறிப்பிட்ட விலையை விட 5 மடங்கு அதிகமாக டிக்கெட் விற்பனையான திரைப்படங்களை விட, இன்று 1 கோடி டிக்கெட்டுகள் விற்கும் ஒரு திரைப்படம்ஓரிரு நாட்களிலேயே அதிக வருமானம் ஈட்டுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.
இதை நாட்டின் பணவீக்கம் உறுதி செய்துள்ளது. அதனால்தான் அதிக வசூலான திரைப்படங்களின் பட்டியலில், டங்கல், பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற சமீபத்திய திரைப்படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.
திரைப்படங்களின் மொத்த வருவாயை பணவீக்கத்தைக் கணக்கிட்டுச் சரிசெய்வதுதான் ஒரு படத்தின் வசூலை கணக்கிட ஒரே சரியான வழியாகும்.
இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த சில திரைப்படங்களுக்கு அப்படி கணக்கு பார்த்தால், முகல்-இ-ஆசம் இந்தி திரைப்படம் தான் பல கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படமாகும். முகலாய இளவரசர் சலீமுக்கும் நடனக் கலைஞரான அனார்கலிக்கும் இடையேயான காதலைப் சொன்ன இப்படத்தில் பிருதிவிராஜ் கபூர், திலீப் குமார், மதுபாலா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆகஸ்ட் 5, 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியான இப்படம்,உலக அளவில் 11 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ்ஸில் புதிய சாதனையைப் படைத்தது. சராசரி டிக்கெட் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் இது ஒரு பெரிய வசூலாகும். இன்றைய பணவீக்கத்துக்குக் கணக்கிட்டால், முகல்-இ-ஆசம் படத்தின் வசூல் சுமார் 4000 கோடி ரூபாய் ஆகும்.
முகல்-இ-ஆசம் திரைப்படம், உலகம் முழுவதும் 15 கோடி டிக்கெட்டுகள் விற்றன. மேலும் மும்பையில் உள்ள மும்பையின் மராத்தா மந்திர் திரையரங்கில், இப்படத்தின் ஒரு டிக்கெட் பிளாக்கில்,100 ரூபாய் வரைக்கும் விற்கப் பட்டது.
அடுத்த நிலையில், சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, அமிதாப் பச்சன், அம்ஜத் கான், ஹேம மாலினி, ஜெயபாதுரி நடித்த ஷோலே படம் கோடிகளில் வசூலானது. 1975ம் ஆண்டு 30 கோடி வசூல் செய்த ஷோலேவின் இன்றைய வசூல் மதிப்பு, சுமார் 3090 கோடி ரூபாயாகும்.
நடிகர் அமீர் கானின் டங்கல் திரைப்படம், 2920 கோடி ரூபாய் வசூல் சாதனையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது தவிர, பாகுபலி மதர் இந்தியா, ஹம் ஆப்கே ஹைன் கோன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, மற்றும் ஆவாரா ஆகிய திரைப்படங்கள், 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
பெரும்பாலான இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. அந்தந்த நாட்டின் பணவீக்கத்துக்கு ஏற்ப பார்த்தாலும் கூட, இன்றைக்கு, இந்திய திரைப் படங்கள் வசூலில் அதிசயத் தக்க சாதனையை படைக்கின்றன.
குறிப்பாக, 100 கோடி கிளப்பில் இருந்து, 1000 கோடி கிளப் என்ற வசூல் பட்டியலில், பல இந்திய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜவான் மற்றும் பதான் படத்தின் மூலம் ஷாருக்கான், டங்கல் படத்தின் மூலம் அமீர் கான், RRR படத்தின் மூலம் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்,பாகுபலி,கல்கி படத்தின் மூலம் பிரபாஸ், KGFபடத்தின் யாஷ் ஆகியோர் 1000 கோடி கிளப்பில் உள்ளனர்.
வரும் காலங்களில், இந்த வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நீண்ட காலமாகவே, இந்தியத் திரைப்படத் துறை, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஆண்டு வருமானத்தில் கணிசமான பங்களிப்பை இந்திய சினிமா துறை அளித்து வருவது குறிப்பிடத் தக்கது.