"கொரோனா"வால் உயிரிழந்தவர்களில் ஆண்களே அதிகம்!
கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் கடந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களில் பெண்களைவிட ஆண்கள் அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
நாட்டில் உள்ள 31 கொரோனா மருத்துவமனைகளில், கொரோனாவின்-3 தாக்கத்தின் போது பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று நோய் குணமாகி வீட்டுக்குத் திரும்பிய பின் உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் விவரங்களைப் பெற்று ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது.
"கொரோனா பெருந்தொற்றின்போது, பெண்களைவிட ஆண்களே கடுமையான நோய் பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைப் பார்த்தோம். இவர்களில் பலர் இறப்புக்கு கரோனாதான் காரணம் என உறுதியாக கூற முடியாது. கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்றவர்களின் இறப்புக்கு பல காரணங்கள் உள்ளன.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வெளியேறி ஓராண்டு நிறைவு செய்த 14,419 பேரை தொடர்பு கொண்டதில், 942 பேர் (6.5%) இறந்திருந்தனர். இவர்களில் 616 பேர் ஆண்கள். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களும், குறைவானது முதல் கடுமையான கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களே அதிகம்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் குறித்த ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. அதில் கொரோனா பாதிப்புக்கு முன் தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் உயிரிழக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது.
தடுப்பூசி செலுத்தியவர்கள் இறப்பு குறைவு என்பதை எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. ஒரு முறை தடுப்பூசி போட்டிருந்தாலும், அது ஓரளவு எதிர்ப்புச் சக்தியை வழங்கியுள்ளது" என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் அபர்னா முகர்ஜி கூறினார்.
மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 2 ஆண்டுகள் கழித்தும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். கொரோனா பாதிப்பு நீண்ட காலம் உள்ளது உண்மை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் நீரிழிவு, நுரையீரல் பிரச்சினை,இரத்தம் உறைதல், உடல் சோர்வு, இரைப்பை பாதிப்பு, தசைவலிப்பு போன்ற நீண்டகால கொரோனா தொடர்பான பிரச்சினைகளைச் சந்திக்கும் அபாயம் உள்ளது என அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.