கோயில்களில் காணிக்கையாக பெற்ற 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர்பாபு தகவல்!
23 கோயில்களில் காணிக்கையாக பெற்ற 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் காணிக்கையாக பெற்ற 192 கிலோ தங்கத்தை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார், ஓய்வுபெற்ற நீதியரசர் மாலா ஆகியோர் பங்கேற்று வங்கி அதிகாரிகளிடம் நகைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, நடப்பாண்டு இறுதிக்குள் 1000 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு, 700 கோடி ரூபாய் அளவிற்கு வைப்பு நிதியாக வைக்கப்படும் என்றும், அதன் மூலம் ஆண்டுதோறும் 12 கோடி ரூபாய் வட்டி வருமானம் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.
அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்றும், கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளதை போல நவீன ரோப்கார் பழனி கோயிலில் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.