கோயில் நிர்வாகத்தை ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றத்தில் ஆடு, சேவல்களை அறுப்போம் என கூறினால், தமிழகம் முழுவதும் முருக பக்தர்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் பெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் நலன் வேண்டி திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் சாண்டி கோயிலில் நடைபெற்ற சண்டியாகத்தில், அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து ஆலயங்களை நிர்வகிப்பதில் அரசாங்கம் மற்றும் அரசியல் தலையிடுவது என்பது வருந்தத்தக்கது என்றும், கோயில் நிர்வாகம் அனைத்தும் ஆன்மீகவாதிகள் கையில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அரசு சார்பற்ற திருக்கோயில் வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள கந்தர் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறுவதுடன், ஆடு, சேவல் அறுப்போம் என கூறுவது தவறு என்று அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார்.