கோலாகலமாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு!
மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement
தை 2-ஆம் நாளன்று பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியில் ஆயிரம் காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ஆக்ரோஷத்துடன் வரும் காளைகளை அடக்கியது மாடுபிடி வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டியதை அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர். களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றிபெற்ற வீரர்களுக்கும் தங்கக் காசு, சைக்கிள், தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதற்கிடையே, போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக பவுடர் பூசியபடியோ, மஞ்சள் பூசியபடியோ அவிழ்த்துவிடப்படும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இருப்பினும் அதனை மீறி மாடுபிடி வீரர்கள் வரும் வழியில் திருநீறு தூவிய மாட்டின் உரிமையாளரை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.