கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் - சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!
கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர்.
கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால் கொங்கு மண்டலத்தில் அரசியல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
தென் மாவட்டத்தில் ஒரு சமூகத்தை உயர்த்தியும், சில சமூகத்தை தாழ்த்தியும் சீமான் பேசுவதால் நாதக கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் ராமசந்திரன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டாக கட்சியின் நடவடிக்கையால், பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறினார். குறிப்பாக, மொழியை வைத்து மட்டும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையோடு தமிழகத்தில் இனி பயணிக்க முடியாது எனவும் ராமசந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் தங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமில்லை என்றும், கட்சியில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் சீமான், களத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை எனவும் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி குற்றச்சாட்டினார்.