சச்சின் கையை பற்றிக்கொண்டு விட மறுத்த காம்ப்ளி : நெகிழ்ச்சி சம்பவம் - சிறப்பு தொகுப்பு!
மும்பையில் நடந்த விழா ஒன்றில், சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளியைச் சந்தித்து பேசினார். சச்சின் டெண்டுல்கருடன் ஒட்டிக்கொண்ட வினோத் காம்ப்ளி, சச்சினின் கையை விட மறுத்தார். இதயத்தை நொறுக்கும் இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. வினோத் காம்ப்ளி உடல் ரீதியாக பலவீனமாக இருந்தது கிரிக்கெட் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரமாகாண்ட் அச்ரேக்கர், இந்தியாவின் பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவார். பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கர், ரமேஷ் பவார் போன்ற பல கிரிக்கெட் வீரர்களுக்கு சிறுவயது பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.
2019ம் ஆண்டு காலமான பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாண்ட் அச்ரேக்கருக்கு மும்பையில் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கர் உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் வினோத் காம்ப்ளி அமர்ந்திருந்ததைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர், நேரடியாக அவரிடம் சென்று பேசினார். வினோத் காம்ப்ளி சச்சினின் கையை பிடித்து கொண்டு உணர்ச்சி ததும்ப இருந்தார்.
ரமாகாண்ட் அச்ரேக்கரின் சிறந்த சீடர்களும் பால்ய நண்பர்களுமான சச்சினும் - காம்ப்ளியும் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் சந்தித்து கொண்டது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பள்ளி பருவத்தில், ஹாரிஸ் ஷீல்டு போட்டியில், ஷர்தாஷ்ரம் வித்யா மந்திர் அணிக்காக, சச்சினும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இருவரின் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து ரஞ்சி டிராபி தொடரில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். அடுத்த சில ஆண்டுகளிலேயே வினோத் காம்ப்ளியும் இந்திய அணியில் இடம் பெற்றார்.
தனது முதல் சர்வதேச சதத்தை அடிக்க சச்சின் சில ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் வினோத் காம்ப்ளி தனது 2வது டெஸ்டி போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார். இறுதியாக 17 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளுடன் வினோத் காம்ப்ளி 2000 ஆம் ஆண்டு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனிடையே சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு தனக்கு போதுமானதாக இல்லை என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். ஒரே நேரத்தில் , இந்தியாவுக்கு விளையாடி சாதனை படைத்த சச்சின்- காம்ப்ளி இருவரில், வினோத் காம்ப்ளியின் வாழ்க்கை விரைவாக வீழ்ச்சி அடைந்தது. வினோத் காம்ப்ளியின் வீழ்ச்சிக்கு ஒழுக்கக் குறைவு மற்றும் மது பழக்கம் காரணம் என்பது துரதிர்ஷ்டமானதாகும்.
விழா மேடையில், சச்சினும் காம்ப்ளியும் ஃ பிட்டாக இருந்தனர் என்றாலும், காம்ப்ளியின் உடல்நலம் தெம்பாக இல்லை என்பது வீடியோவில் தெளிவாக தெரிந்தது.
இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லை . சச்சினுக்கு 51ம், காம்ப்ளிக்கு 52ம் தான். விழா மேடையில், தனது சிறுவயது பயிற்சியாளர் ரமாகாண்ட் அச்ரேக்கர்-க்காக ஒரு பாடலை பாடி வினோத் காம்ப்ளி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஆனாலும் அவரின் பேச்சில் தெளிவு இல்லை. வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது பட்டவர்த்தனமாக தெரிந்தது.
மது பழக்கத்துக்கு அடிமையான வினோத் காம்ப்ளியைத் பல ஆண்டுகளாக சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நண்பர்கள்,தூர விலக்கி வைத்துள்ளனர்.
இந்தியாவின் 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீர்கள்,வினோத் காம்ப்ளிக்கு உதவி வழங்க முன்வந்த போதும், மது பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான முதல் அடியை காம்ப்ளி எடுத்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தனர்.
மறுவாழ்வுக்கு சிகிச்சை மையத்துக்கு காம்ப்ளி சென்றால், நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியிருந்தார்.
முன்னாள் தொடக்க வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் புற்றுநோயுடன் போராடியபோது 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீர்கள் உதவினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போதாவது வினோத் காம்ப்ளி தனது வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வார் என்று அவரது ரசிகர்களும் சக விளையாட்டு வீரர்களும்,நண்பர்களும் நம்புகின்றனர்.