சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் - அண்ணாமலை உறுதி!
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் அப்பாவு திமுக தொண்டரைப் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சபாநாயகர் பதில் சொல்வது எப்படி சரியாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.சபாநாயகர் நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள் அரசியல் செய்வதால், கவர்னர் கருத்து சொல்கிறார். நீங்கள் அரசியல் செய்யவில்லை என்றால், கவர்னர் ஏன் தலையிட போகிறார். துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் ஆர்.என். ரவி வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளார். துணைவேந்தர் தேர்வில் முறைகேடு என்று யாரும் சொல்லவில்லை. அமைச்சர் தான் அரசியல் செய்கிறார். அரசியல் செய்யும் அமைச்சரை கவர்னர் சரியான திசையில் கொண்டு செல்வதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
அமைச்சர் ரகுபதிக்கு காவல்துறையின் பணிகள் என்ன என்பது பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ரவுடிகள் பேசுவது போல் சட்டத்துறை அமைச்சர் பேசுவது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.