சனாதன தர்மத்தை தழுவும் லாரன் பவல் ஜாப்ஸ் : இந்து மத கலாச்சாரத்தை கற்க விரும்பும் கோடீஸ்வர பெண்மணி - சிறப்பு தொகுப்பு!
மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ், சனாதன தர்மத்தை தழுவுவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
Advertisement
பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோய் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் அறக்கட்டளை, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் 7.3 சதவீத பங்கு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் 38.5 மில்லியன் ஷேர்கள் ஆகியவற்றின் மரபுரிமை ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 59-வது இடத்தையும், தொழில்நுட்ப துறையில் உள்ள பெண் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தார் லாரன் பவல் ஜாப்ஸ்.
இந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள லாரன் பவல் ஜாப்ஸ், இந்து மத போதனைகளால் ஈர்க்கப்பட்டு சனாதன தர்மத்தை தழுவுவது குறித்த விருப்பத்தை தனது ஆன்மிக குருவான சுவாமி கைலாஷ்னந்த் கிரியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து லாரன் பவல் ஜாப்ஸின் ஆன்மிக குருவான சுவாமி கைலாஷ்னந்த் கிரி, ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியும் அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி லாரன் பவலுக்கு, இந்து முறைப்படி கமலா என்று பெயர் சூட்டப்பட்டு, அவருக்கென்று ஒரு கோத்ரம் ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, மகர சங்கிராந்தியன்று அவருக்கு தீட்சை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"MATERIALISM" எனப்படும் காணும் பொருளே உண்மை என்ற தத்துவத்தை உணர்ந்து அதன் உச்சத்தை கமலா அடைந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போது அவர் சனாதன தர்மத்தை தழுவி தனது கலாச்சாரத்தை குரு மூலம் கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
கமலா என்கிற லாரன் பவல் ஜாப்ஸை மிகவும் எளிமையானவர், திமிர் அற்றவர் என குறிப்பிட்டுள்ள சுவாமி கைலாஷ்னந்த் கிரி, இரு பெரிய விமானங்களில் 50 பணியாட்களுடன் இந்தியாவிற்கு வந்தாலும், கமலா ஒரு சாதாரண பக்தரைப்போல 4 நாட்களாக கூடார நகரத்தில் தங்கியிருந்ததாக தெரிவித்தார்.
லாரன் பவல் மட்டுமல்ல உலகின் எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் மகா கும்பமேளாவில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டவர்கள், திரிவேணி சங்கமத்தில் நீராடி, பல பஜனைகளை நிகழ்த்தி தங்கள் ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.
அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி பலதரப்பு பக்தர்களையும் இந்த மகா கும்பமேளா ஒன்றிணைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.