சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சாமி தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமும் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் சன்னதி மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் சன்னதி இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாராயணத்துடன் மூடப்படுகிறது.
இதனிடையே சன்னதி மூடப்பட்ட பின்னரும் பக்தர்கள் இரவில் 'பதினெட்டம் படி' ஏற அனுமதிக்கப்படுகின்றனர். 3 மணிக்கு கோவில் திறக்கப்படும் போது நீண்ட வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது தங்களுக்கு நிம்மதி அளிப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நிறைவடையும், அன்று இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.