சபரிமலையில் மாயமான தமிழக சிறுமி - அடையாள பட்டை மூலம் மீட்பு!
சபரிமலைக்கு தந்தையுடன் சென்ற சிறுமி மாயமான நிலையில், அடையாளபட்டை மூலம் மீட்கப்பட்டார்.
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலும், கூட்ட நெரிசலில் அவர்களை அடையாளம் காணும் வகையிலும், அம்மாநில போலீசார் அடையாள பட்டை வழங்கியுள்ளனர்.
பம்பையிலிருந்து மலை ஏறும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலைக்கு சென்ற ஊட்டியைச் சேர்ந்த குழந்தை ஒருவர், கூட்ட நெரிசலில் தனது தந்தையை தவறவிட்டுவிட்டார்.
இதையறிந்த போலீசார் சிறுமியின் கையில் இருந்த அடையாள பட்டையில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சிறுமி இருக்கும் விவரத்தை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு சென்ற தந்தையிடம் சிறுமியை ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.