சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது.
சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு நவம்பர் தேதி 16 ஆம் தேதி முதல் மண்டல கால பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973ஆம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்கஅங்கி மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.
இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி நேற்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது பின் மாலை 3.30 மணிக்கு தலைசுமையாக சன்னிதானத்திற்கு புறப்பட்டது. மாலை 5.30 மணியளவில் சரங்கொத்தியில் வைத்து தேவசம் போர்டு சார்பாக சிறப்பு வரவேற்று அளிக்கப்பட்டு மேளதாளம் முழங்க மாலை 6.20 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
18 ஆம் படி வழியாக கொண்டுவரப்பட்ட தங்க அங்கியை கோவில் தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து பக்தர்களின் சரணகோஷம் முழங்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். சிகர நிகழ்ச்சியான மண்டலபூஜை இன்று பகல் 12 மணி முதல் 12:30க்குள் நடைபெறும். இந்த நேரத்தில் ஐயப்பனுக்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பு கலபாபிஷேகம் நடைபெறுகிறது.